ஐதராபாத், ஆக.9: பாகுபலி’ படத்தில் நடித்துள்ள மதுபிரகாஷ் என்பவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். ‘பாகுபலி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் மதுபிரகாஷ். இவர் டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். இவருக்கும் பாரதி என்ற பெண்ணுக்கும் 2015-ல் திருமணம் நடந்தது.

அவருக்கும் சக நடிகை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாரதி சந்தேகித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மது பிரகாஷ், மனைவி பாரதியிடம் படப்பிடிப்புக்கு போவதாக கூறி விட்டு சென்றார். அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு பாரதி போனில் தொடர்புகொண்டு உடனடியாக வீட்டுக்கு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டினார்.

அதனை பொருட்படுத்தாத மதுபிரகாஷ், இரவு வீட்டுக்கு வந்தபோது பாரதி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.