சென்னை, ஆக.9: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொடர்ச்சியாக 20 முறை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு போன்மூலம் மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்க நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் மர்ம போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதேபோல், தொடர்ச்சியாக 20 முறை போன் கால் செய்து காவல்துறையை கடுப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சைபர்செல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த செல்போன் எண்ணை கண்காணித்த போலீசார், பராசக்தி நகரை சேர்ந்த வினோத்குமார் (வயது 33) என்பது தெரியவந்ததையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். குடிபோதையில் இருந்த வினோத், தனது செல்போனில் இருந்து போதையில் இவ்வாறு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

வினோத் இப்படி செய்து புதிதல்ல என்பது விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஜூலை 28-ம் தேதியும் இதே பாணியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, வீணாக வதந்தி பரப்பியவரும் இவர்தான் என கண்டறியப்பட்டது. தனது மனைவி காணாமல் போன புகாரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இவ்வாறாக செய்ததாக வினோத் அப்போது போலீசில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்ட வினோத் ஆகஸ்ட் 5-ம் தேதிதான் ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.