மழை குறுக்கீடு: இந்தியா-விண்டீஸ் ஆட்டம் பாதியில் ரத்து

விளையாட்டு

கயானா, ஆக.9: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டி கயானாவில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ய, மழை பெய்துக்கொண்டிருந்ததால் போட்டி 34 ஓவர்கள் கொண்டதாகக் குறைக்கப்பட்டது. அதன்படி, முதல் பேட்டிங் செய்த விண்டீஸின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 4 ரன்களிலேயே ஆட்டமிழக்க, லெவிஸூடன் ஷாய் ஹோப் இணைந்தார்.

அந்த அணி, 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்ததன் காரணமாக, போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை மறுதினம் (ஆக.11) நடைபெறவுள்ளது.