சென்னை, ஆக.9: உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை காவல்துறை விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் கடந்த ஜனவரி 14 ம் தேதி கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, லாரி ஒன்றை வழிமறித்து சோதனை செய்ததில், 3 ஆயிரத்து 500 கிலோ குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் தங்கராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது பரமத்தி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம், சிகரெட் மற்றும் புகையிலை பொருள் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குடோன் உரிமையாளர் தங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க தனி அதிகாரிகள் இருக்கின்றனர். இந்த பிரிவுகளின் கீழ் தொடர்ப்படும் வழக்குகளை காவல் துறையினர் விசாரிக்க முடியாது என தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை கைவிடும்படி காவல் துறையினருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டம், சிகரெட், புகையிலை பொருட்கள் ஒழுங்குமுறை சட்டப் பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.