இஸ்லாமாபாத், ஆக.10: டெல்லி-லாகூர் இடையிலான பேருந்து சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை இந்தியா ரத்து செய்ததுடன் அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் பதற்றம் அடைந்த பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் மற்றும் ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் பாகிஸ்தான் நிறுத்தியது.

இந்நிலையில், லாகூர்-டெல்லி இடையே இயக்கப்படும் பேருந்து சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு மந்திரி முராத் சயீத் தெரிவித்தார்.

கடந்த 1999-ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பஸ் சேவை, 2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், 2003-ல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.