விழுப்புரம், ஆக. 10: திண்டிவனத்தில் ஆசிரியர் ஒருவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென அவரது தந்தை உயிரிழந்தார். இதையடுத்து, மறைந்த தந்தையின் சடலம் முன், அவரது ஆசியுடன் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள சிங்கனூரைச் சேர்ந்தவர் தெய்வமணி (வயது 50), விவசாயி. இவரது மனைவி செல்வி (வயது45). இவரது மகன் அலெக்ஸாண்டர் (வயது 29), தனியார் பள்ளி ஆசிரியர். இவருக்கும், உடன் பணிபுரியும் ஆசிரியையான மயிலம் அருகேயுள்ள குணமங்கலத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகள் ஜெகதீஸ்வரிக்கும்(வயது 24) சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற செப்டம்பர் 2-ம் தேதி, மயிலம் முருகன் கோயிலில் திருமணம் நடைபெறவிருந்தது.

இரு வீட்டாரும், திருமண அழைப்பிதழ் வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அலெக்ஸாண்டரின் தந்தை தெய்வமணி உடல் நலக் குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில், பெற்றோரின் முன்னிலையில்தான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கூறினார்.அதன் படி நிச்சியத்த பெண்ணை அழைத்துக் கொண்டு, நேற்று சிங்கனூருக்கு வந்தனர். பின்னர் இறந்த தனது தந்தையின் அருகில் தாயை அமரவைத்து பெற்றோருக்கு மாலை அணிவித்து பெற்றோரின் கையால் மாங்கல்யத்தை தொட்டு ஆசிவதித்தபடி திருமணம் செய்து கொண்டார்.

இறந்த தந்தையின் முன்பு மகன் திருமணம் செய்து கொண்டதை எதிர்பார்க்காத உறவினர்கள் துக்க காரியத்திற்கு வந்த இடத்தில் மணமக்களை வாழ்த்தி ஆசி வழங்கினர்.