காஞ்சிபுரம், ஆக. 10: ஆதி அத்திவரதர் கடந்த 41 நாட்களில் இதுவரை 80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் பெருமாளை தரிசிக்க இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையிலும் தொடர் விடுமுறை என்பதாலும் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ஜூலை 1ம்தேதி முதல் 31ம்தேதி வரை சயனகோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி அத்திவரதர் , ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். ஆதி அத்திவரதரின் நின்றகோலத்தின் 10 நாளும் பெருமாளுக்கு உகுந்த 6-வது சனிக்கிழமை என்பதால் இளம் ரோஸ் வெண்பட்டு நிற பட்டாடை அணிந்து பல வண்ண மலர்களால் தொடக்கப்பட்ட மாலைகள் சூடி சிறப்பு அலங்காரத்தில் காட்சி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அவரது சிறப்பு அலங்காரத்தையும், திருக்காட்சியும் கண்டு தரிசித்து பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.

அத்தி வரதர் வைபவம் முடிய இன்னும் 6 நாட்களே உள்ளதால் அதிக அளவு பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். நள்ளிரவு 12 மணி முதல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் கூட்டத்தை சமாளிக்க இன்று முதல் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.