சென்னை, ஆக.10: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். வேலூர் தொகுதியை பொறுத்தவரை, அதிமுக மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அதிக ஒட்டுகளை பெற்றுள்ளது. எனவே, இது தோல்வியல்ல, வெற்றிதான் என்றும் அவர் கூறினார்.

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த சிங்கம் மற்றும் புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய பின் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: வேலூர் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றதென்பதை எப்படிப் பார்க்கின்றீர்கள்.

பதில்: முன்னர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம், அதேபோல, தள்ளி வைக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர்கள் வெற்றி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார்கள். இருந்தாலும், 6 சட்டமன்றத் தொகுதிகளில், அதிமுக குடியாத்தம், தேவிக்குப்பம், அணைக்கட்டு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றோம். இதை மிகப் பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகின்றோம்.

கேள்வி: முத்தலாக் மசோதா, காஷ்மீர் பிரச்சினை இரண்டிற்கும் பிஜேபி அரசிற்கு ஆதரவு தெரிவித்ததால் சிறுபான்மையினர் வாக்கு அதிமுக-விற்கு விழவில்லை என்பது பரவலாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றார்கள்.

பதில்: வாக்கு யாருக்கு அளிக்கப்படுகின்றது என்பது ரகசியம். அப்படியிருக்கும்பொழுது சிறுபான்மையின மக்கள் வாக்களித்தார்களா? பெரும் பான்மையின மக்கள் வாக்களித்தார்களா? என்று எப்படித் தெரியும். யூகத்தின் அடிப்படையில் கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. ஜாதி, மதம், இனம், மொழி இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இன்றைக்கு தமிழகம் தான் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, மதம், ஜாதியின் அடிப்படையில் இங்கு அரசியல் செய்வது கிடையாது, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு நாங்கள் பார்க்கின்றோம்.

கேள்வி: இதே நிலை தான் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருமா?
பதில்: உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

கேள்வி: எப்பொழுது தேர்தல் வரும்?
பதில்: விரைவில் தேர்தல் வரும். இவ்வாறு முதல்வர் பேட்டியளித்தார்.