மேட்டூர், ஆக.10: தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கபிணி அணை நிரம்பி வருகிறது. இந்த அணையில் இருந்தும், தாரகா அணையில் இருந்தும் காவிரியில் வினாடிக்கு சுமார் 1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடபட்டுள்ளது.

இதனால் காவிரி நீர் தமிழக எல்லைக்குள் காவிரி நீர் நுழையும் இடமான பில்லிகுண்டுலுக்கு நேற்று மாலை நீர் வரத்து 50 ஆயிரம் கன அடியாகவும் இரவில் மேலும் 55,000 கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இங்கு குளிக்கவும் பரிசல் விடவும் 5-வது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி அதிகரித்து தற்போது 57 அடியாக உள்ளது. தற்போது திறந்துவிடப்படும் கூடுதல் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அடுத்த ஒரு வாரத்திற்குள் மேட்டூர் அணை நிரம்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகுமலை பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இங்குள்ள காபி எஸ்டேட் மற்றம் ஏலக்காய் தோட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. விராப்பட் தாலுகா மற்றும் தட்சணகனடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயரிழந்தனர். தெற்கு கனடா பகுதியில் மழை நீடிக்கும் என்பதால் ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது.

இதனிடையே தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 31.92 அடியாக உயர்ந்திருக்கிறது. மதுரையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகள் 50 சதவீதம் நிரம்பி இருக்கிறது.