சென்னை, ஆக.10: மகா நடி படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி வேடத்தில் நடித்ததற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். சாவித்திரி கேரக்டரில் நடிப்பது சவாலாக இருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பட்டியல் மத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) தெலுங்கு திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்திற்காக தேசிய விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். என்னால் சாவித்திரி கேரக்டரில் சரியாக நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. மேலும், அந்த கேரக்டரில் நடிப்பது மிகவும் சவாலாகவே இருந்தது.

தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததே இந்த விருதை பெற காரணமாக இருந்தது. இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார். இந்த தேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளேன் என்று நம்புவதாகவும், இனி வரும் காலங்களில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாகவும் இந்த விருதை பெற காரணமாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.