சிங்கம்- புலிகுட்டிக்கு பெயர் சூட்டினார்

சென்னை

சென்னை, ஆக. 10: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 3 சிங்க குட்டிகள் மற்றும் 4 புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டினார். பின்னர் காண்டாமிருக இருப்பிடத்தை பார்வையாளர்களுக்காக திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (10.8.2019) காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 3 சிங்கக்குட்டிகளுக்கும் 4 புலிக்குட்டிகளுக்கும் பெயர் சூட்டினார். மேலும், வளமைப்படுத்திய காண்டாமிருக இருப்பிடத்தை பார்வையாளர்களுக்காக திறந்து வைத்தார்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், சிங்கங்கள் மற்றும் புலிகள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு அவை இனப்பெருக்கம் செய்து வருகின்றன. சிவா என்ற ஆண் சிங்கத்திற்கும் நீலா என்ற பெண் சிங்கத்திற்கும் 6.1.2019 அன்று பிறந்த ஒரு ஆண் மற்றும் இரு பெண் சிங்கக்குட்டிகளை தொடர் கண்காணிப்பில் பூங்கா நிர்வாகமானது நல்ல நிலையில் பாதுகாத்து வருகிறது. இந்த மூன்று சிங்கக்குட்டிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரதீப், தக்ஷனா, நிரஞ்சனா என்று பெயர் சூட்டினார்.

அதேபோன்று,விஜய் என்ற ஆண் புலிக்கும் உத்ரா என்ற பெண் புலிக்கும் 8.8.2018 அன்று பிறந்த ஆண் புலிக்குட்டி மற்றும் நகுலா என்ற ஆண் புலிக்கும் நர்மதா என்ற பெண் புலிக்கும் 9.1.2019 அன்று பிறந்த 2 பெண் (1 வெள்ளை பெண் புலிக்குட்டி) மற்றும் 1 ஆண் புலிக்குட்டிகளை பூங்கா நிர்வாகம் தொடர் கண்காணிப்பில் நல்ல நிலையில் பாதுகாத்து வருகிறது. இந்த நான்கு புலிக்குட்டிகளுக்கு முதலமைச்சர் இன்று மித்ரன், யுகா, வெண்மதி, ரித்விக் என்று பெயர் சூட்டினார்.

முதலமைச்சர் 2018 ஜூலை மாதம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிந்த போது, இந்திய காண்டாமிருகம் வெகு விரைவில் இப்பூங்காவிற்கு கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்கினப் பரிமாற்றம் மூலமாக பீகார் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் காண்டாமிருகங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஆண் காண்டாமிருகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோன்று, பீகார் மாநிலம், பாட்னா, சஞ்சய்காந்தி உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்படவுள்ளது. அதற்காக வளமைப்படுத்தப்பட்ட காண்டாமிருக இருப்பிடத்தை முதலமைச்சர் இன்று பார்வையாளர்களுக்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் துறைத் தலைவர் துரைராசு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சஞ்சய்குமார் ஸ்ரீவத்சவா,, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் யோகேஷ் சிங், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.