சென்னை, ஆக.10: சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை குறிவைத்து செல்போன் பறித்து சென்ற தப்பியோடிய மர்மநபர்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். நாகையை சேர்ந்தவர் லட்சுமி (வயது 20). இவர், சென்னை ராயப்பேட்டையில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்துவருகிறார்.

இவர் நேற்று கோபாலபுரம் கத்திட்ரல் சாலையில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் லட்சுமியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவந்தனர்.

இதனிடையே மயிலாப்பூர் கற்பக அவென்யூவில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவரிடமும், இதேபாணியில் திருடிவிட்டு தப்பியோடிய வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிபிடித்து பட்டினப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில், ஐஸ் அவுஸை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 18), நியூ ஆவடி ரோடை சேர்ந்த கார்த்திக் என்பதும், இவர்கள்தான் லட்சுமியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து செல்போனை மீட்ட போலீசார், அவர்களின் பைக்கை பறிமுதல் செய்தனர்.