புதுவை, ஆக.10: புதுச்சேரி சட்டசபை வரும் 19-ம் தேதி கூடவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம் . ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகு சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி அன்று ஐந்து மாதங்களுக்கு (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தேவையான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி சட்டசபை கூடி புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து பொறுப்பேற்றுக்கொண்டார் அதை தொடர்ந்து புதுவை மாநில திட்டக் குழு தலைவரும் கவர்னரும் ஆன கிரண் பேடி தலைமையில் பட்ஜெட் தொகையை இறுதி செய்ய திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அதன்படி, பட்ச தொகை ரூ.8 ஆயிரத்து 425 கோடியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்த அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை அரசு அனுப்பி உள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது. எனவே, வரும் 19-ம் தேதி புதுவை சட்டசபை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் சம்பந்தமாக சட்டமன்றத்தில் எழுப்பக் கூடிய கேள்வி பட்டியலை அனுப்பி வைக்குமாறு சட்டப்பேரவை செயலகம் எம்.எல்.ஏக்களுக்கு தனி தனியே கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.