புதுடெல்லி, ஆக.10: காங்கிரஸ் புதிய தலைவராக முகுல்வாஸ்னிக், மல்லிகார்ஜூனா ஹார்கே ஆகியோரில் ஒருவர் தேர்ந்ததெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த இரண்டரை மாதங்களாக இந்த பதவி காலியாக உள்ளது, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை டெல்லியில் சோனியாவின் இல்லத்தில் கூடியது.

சோனியாகாந்தி, ராகுல், ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், கே.வி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் ராகுல்காந்தி தலைவராக பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 134 ஆண்டு கால பழமை மிக்க காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்திற்கு அப்பாற்பட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தலைவர் தேர்வில் பங்கேற்க, ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் மறுத்து விட்டனர்.

தலைவர் தேர்விற்கான பணிகள் தொடங்கிய போது சோனியாவும், ராகுலும் கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டனர். முகுல்வாஷ்னிக், மல்லிகார்ஜூனா ஹார்கே ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுப்பது பற்றி தலைவர்கள் விவாதித்தனர்.
நீண்ட நிர்வாக அனுபவமும், மன்மோகன் சிங், நரசிம்மராவ் அமைச்சரவையில் இடம்பெற்று திறமையாக செயலாற்றிய ஆற்றலும் இருப்பதால் முகுல்வாஷ்னிகை தேர்ந்தடுப்பதற்கு தலைவர்களிடையே அதிக ஆதரவு இருந்ததாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

இது குறித்து அபிஷேக் சிங்வி கூறுகையில், காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதில் சற்று தாமதம் ஆனாலும் பெரும்பாலான மூத்த தலைவர்களின் விருப்பப்படியே இந்த தேர்வு இருக்கும் என்றார். யார் புதிய தலைவர் என்பதற்கு பதிலளித்த போது புத்திசாலியான ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வு முடிந்ததும் கட்சி அமைப்பிற்கான தேர்தல் நடைபெறும் என்றார்.