நாகர்கோவில், ஆக,10: கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 500 குளம் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அதனையொட்டி உள்ள குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இரவும் விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக சிற்றாறு-1ல் 66.6 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை காலை 9 மணி வரை இடைவிடாது பெய்தது. இதனால் கோட்டார் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தவாறு சென்றனர். மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை, கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, இரணியல் பகுதிகளிலும் இன்று காலையில் கனமழை கொட்டியது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கீரிப்பாறை, மோதிரமலை, குற்றியாறு பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் மலையோர பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தோட்ட தொழிலாளர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். தோவாளை சானல், பழையாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தேரூர் பெரியகுளம் நிரம்பி வழிவதால் குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்துவரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 3ரு அடியும் உயர்ந்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாகர்கோவில் வரும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.