5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி

சென்னை

சென்னை, ஆக.10: நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இது குறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவலாஞ்சியில் 6.8.2019, 7.8.2019 மற்றும் 8.8.2019 ஆகிய மூன்று தினங்களில் முறையே 405 மி.மீ., 820 மி.மீ. மற்றும் 911 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 1704 பேர், 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான வேட்டி, சேலை, தலையணை மற்றும் போர்வை போன்றவற்றை வழங்கவும், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன். நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளைச் சீர்செய்வதற்காக 29 ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காட்டுக்குப்பையில் கனமழையில் சிக்கியிருந்த 36 மின் பணியாளர்களும் பொதுமக்களும் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சியில் சிக்கியிருக்கும் 40 நபர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி, குந்தா வட்டத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகன் சென்னன், உதகை வட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி விமலா, அர்ஜூனன் என்பவரது மனைவி சுசீலா, கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் பாவனா மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பச் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு அவர்களது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.