சென்னை, ஆக.10: கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கேரளா செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழைக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய பலரை காணவில்லை.

நிலச்சரிவு காரணமாக சாலைப் போக்குவரத்தும் பதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக வயநாடு, மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 செ.மீ வரை மழை பெய்துள்ளது.

மாநிலத்தின் மத்திய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலாம்பூர் என்ற இடத்தில் 40 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன.
மழைக்கு உயிரிந்தோர் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது. கொச்சி விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டு விட்டத்தால் சென்னையில் இருந்து செல்லும் 10 விமான சேவை ரத்து செய்யப்பட்டு விட்டது.

ரெயில் பாதைகளில் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஆலப்புழா வழித்தடத்தில் ரெயில்கள் ஓடவில்லை. மாவேலி எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம், வேளாங்கண்ணி, சிறப்பு ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

சென்னை, புதுச்சேரி மற்றும் நெல்லையில் இருந்து கேரளா மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் ஓடவில்லை. ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் முன்பதிவு செய்தவருக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன் பார்வையிட்டார். நிலச்சரிவுகளில் வயநாடு சாலையில் புதுமாலா மற்றும் மெப்பாடி போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டத்தில் பலரை காணவில்லை. இந்த இடங்களுக்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.