சென்னை, ஆக,10: மனிதர்களுக்கு வயது அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனையில் மூளைக்கும், மனதிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் சர்வதேச நரம்பியல் நிபுணர்கள் பங்கேற்று பேசினர்.
நரம்பியல் மற்றும் மூளை தொடர்பான மருத்துவ கருத்தரங்கம் மூளைக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பியல் என்ற தலைப்பில் சென்னையில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த நரம்பியல் நிபுணர் பேராசிரியர் மாதவ் தம்பிசெட்டி மற்றும் ஸ்தாபகர் புத்தி கிளினிக் மற்றும் சர்வதேச நரம்பியல், மனநல மருத்துவர் சங்க தலைவர் பேராசிரியர் என்னபடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் அப்போது அவர்கள் கூறியதாவது, மனித இனத்தை பொறுத்தமட்டில், வயது அதிகரிக்க அதிகரிக்க, மூளையும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒழிய செயலும் சிந்தனையும் இயல்பாக செயல்பட இயலாது.

வலிப்பு, மனஅழுத்தம், போன்ற பலவகையான உபாதைகளுக்கும் அந்த ஒருங்கிணைப்பு திறன் செயலிழந்து போவதுதான் காரணம். கையினாலோ, வேறொரு உடல் உறுப்பின் துணைகொண்டு ஒரு காரியம் ஆற்ற முற்படும் தருவாயில், மூளையிலிருந்து கட்டளை பிறந்து, மனம் அதை உள்வாங்கியவுடன் அக்கட்டளை செயல் வடிவம் பெறுகிறது.

இரு மருத்துவ மேதைகளும் அவ்வகையான செயல்பாடுகளுக்கு காரணமான நரம்பியல் சம்பத்தப்பட்ட நிகழ்வுகள் செயல் முறைகள் பற்றி கேள்வி பதில் பாணியில் அறிய பல நுணுக்கமான நரம்பியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி தீர்க்கமாகவும் தெளிவாகவும் விவாதித்தார்கள்

வயது அதிகரித்து முதுமை படர காரணம் என்ன, இத்தருணங்களில், உடல் வளத்திற்கும் மனவளத்திற்கும் தொடர்புண்டா இந்த சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலுமா, உடல் பருமன், வேலையிலிருந்து ஓய்வு தூக்கமின்மை, ஐடி துறையில் வேலை செய்பவர்கள்களின் நேர மாற்றம்-அதன் விளைவாக உணவு உட்கொள்ளும் நேரங்களில் மாற்றங்கள், தூக்க நேர மாற்றங்கள் -இந்த காரணங்களால் மூளையும், மனதும் உடலும் பாதிக்கின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.