சென்னை, ஆக.10: ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி, வரும் 14-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீப காலமாக சரியாக விளையாடாத சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத ஜோப்ரா ஆர்ச்சர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார்.