சென்னை, ஆக.11: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் எந்த குழப்பத்துக்கும் இடமில்லை என்றும், அங்கு தீவிரவாதம் ஒழிக்கப்படுவது உறுதி என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாடு பொருளாதார சக்தி பெற்று வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. அவர் நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்து பொது நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரை, மாநிலங்களவையை திறம்பட நடத்திய விதம் மற்றும் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரை ஆகியவைகளை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை தொகுத்து ஆவணவ புத்தகமாக தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை அமித்ஷா வெளியிட வெங்கய்யா நாயுடு பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியில் பேசினார். அவர் பேசுகையில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. விரைவில் தமிழ் கற்று கொண்டு பேசுவேன். இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
பிஜேபி தேசிய தலைவர் என்ற முறையிலோ, எம்பி என்ற முறையிலோ, மத்திய அமைச்சர் என்ற முறையிலோ இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை. வெங்கையா நாயுடுவின் மாணவர் என்ற முறையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளேன்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை அரசு நீக்கியது. 370 ரத்துக்கு பிறகு மற்றவர்களுக்கு குழப்பம், ஆனால் நான் தெளிவாக இருந்தேன். இனி காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும் என நம்புகிறேன். காஷ்மீர் இனி வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். நாட்டின் நன்மைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் எப்போதுமே நான் உறுதியாக இருந்தேன்.

மாணவர் பருவத்திலேயே போராடியவர் வெங்கையா நாயுடு. அவசர நிலையின் போது ஜனநாயகத்தை மீட்க போராடி சிறைவாசம் அனுபவித்தவர்.

கல்லூரி மாணவரிலிருந்து துணை ஜனாதிபதி வரை வெங்கையாவின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு சிறந்த பாடம். அவரது சீரிய தலைமையில் காஷ்மீர் மசோதாவை மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம். விவசாய குடும்பத்தை சேர்ந்த வெங்கையா நாயுடு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு வகுத்து தர காரணமாக இருந்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் மற்றும் எம்ல்ஏக்கள் எம்பிக்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் நியூஸ் டுடே, மாலைச்சுடர், டாக் மீடியா குரூப் எடிட்டர் டி.ஆர்.ஜவஹர் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.