சென்னை, ஆக.11: பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜுனரும் போன்றவர்கள் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசினார். ஆபரேஷன் காஷ்மீர் நடவடிக்கை மிகவும் சிறப்பானது என்றும் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சிறந்த ஆன்மீகவாதி, நாட்டுப்பற்று மிக்கவர். அவரைப் பற்றிய ஆவணப்புத்தகம் வெளியிடுவது பெருமைமிக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐதராபாத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு தன்னுடன் படித்த கல்லூரி நண்பர்கள் சுமார் 120 பேரை அவர் அழைத்திருந்தார். ஒவ்வொருவரையும் அவர் பெயர் சொல்லி அழைத்தார். அந்த அளவுக்கு நினைவாற்றல் மிக்கவர்.

மக்கள் மீது அக்கறை கொண்ட அவரது பணி போற்றத்தக்கது.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணரும், அர்ஜுனரும் போன்றவர்கள். இவர்களில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆபரேஷன் காஷ்மீர் நடவடிக்கை மிகவும் சிறப்புமிக்கது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.