சென்னை, ஆக.11: சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை ஏற்படுத்த வேண்டும் என்றும், எம்எல்ஏக்கள் கட்சி தாவுவதற்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்துக்குள் முடிவு காண வேண்டும் என்றும் சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

மத்திய அமைச்சராக ஆகவில்லை என்று கண்ணீர் விட்டதில்லை, துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது கண்ணீர் வீட்டேன் என்றார்கள். துணை ஜனாதிபதியாக ஆனதால் இனி பிஜேபி அலுவலகத்திற்கு செல்ல முடியாது என்றுதான் வருந்தினேன். ஆந்திராவுக்கு வாஜ்பாய் வருகையை சுவரில் எழுதியவன், அவருக்கு அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன்.

சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகு உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. சாதி, மத, பாகுபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை ஏற்படுத்த வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் ஒளிவுமறைவற்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். ஓய்வு வயதை உயர்த்தலாம். வழக்குகள் தேங்குவதற்கு தீர்வு காண வேண்டும். எம்எல்ஏக்கள் கட்சி தாவுவதற்கு 6 மாதம் அல்லது ஒரு வருடத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்றார்.