புதுடெல்லி, ஆக.11: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறும் வரை அவர் தற்காலிகமாக இந்த பதவியில நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி கடந்த மே 25-ஆம் தேதி விலகினார். இதையடுத்து, புதிய தலைவர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் செயற்குழு டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை கூடியது. இதனிடையே, 5 குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில், காங்கிரஸ் செயற்குழு சனிக்கிழமை இரவில் மீண்டும் ஆலோசனை நடத்தியது. இரவு 11 மணி தாண்டியும் இக்கூட்டம் நீடித்தது.

முடிவில் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், ராகுல் காந்தியின் ராஜிநாமாவும் ஏற்கப்பட்டது. அவர் சோனிய இதற்கு சம்மதித்ததாக தகவல் வெளியானது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கே காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கே.சி.வேணுகோபால், கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது சோனியா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தெரிவித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தில், “காங்கிரஸ் கட்சியை மிகுந்த உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் ராகுல் காந்தி வழிநடத்தினார். மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றதன் மூலம் அரசியல் வாழ்வில் பொறுப்புடைமைக்கு புதிய அளவுகோல்களை அவர் நிர்ணயித்திருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.