சென்னை, ஆக. 11:திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. லடாக் பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.

அதை யாரும் எதிர்க்கவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத்தான் திமுக எதிர்க்கிறது. வெற்றி என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்று. அதிமுக வளர்பிறை, திமுக தேய்பிறை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் படிப்படியான தோல்விகளை கண்கூடாக அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதைத் தாண்டி தன்னுடைய மனதை ஆற்றிக்கொள்வதற்காக அவர் கூறும் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்றார் அவர்.