ஐதராபாத், ஆக.11: பெண்கள் தங்களை தற்காத்துகொள்ளும் வகையில், ஸ்மார்ட் வளையல்களை உருவாக்கியுள்ள தெலுங்கானாவை சேர்ந்த வாலிபர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் காடி ஹரிஷ் (வயது 23) என்ற வாலிபர், தனது நண்பர் சாய் தேஜாவுடன் இணைந்து, பெண்களின் தற்காப்புக்கு உதவும் ஸ்மார்ட் வளையலை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, பெண்களிடம் யாரேனும் அத்துமீறி நடந்துகொள்ளும் பட்சத்தில், இந்த வளையல் ஒருவகை மின் அதிர்வை (எலக்ட்ரிக் ஷாக்) தரும். அத்துடன், அந்தப் பெண் இருக்கும் இடம் குறித்த தகவலை அவருடைய பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு அறிவிக்கும்.

இதன்மூலம், ஆபத்தான சமயத்தில் பெண்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள இயலும். இந்த ஸ்மார்ட் வளையல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, அதில் வெற்றிக்கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வெகு விரைவிலேயே இந்த ஸ்மார்ட் வளையல்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் வலையளை அணிந்து சோதித்த பெண்கள் நன்றாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஸ்மார்ட் வளையலை உருவாக்கிய காடி ஹரிஷ் கூறுகையில், ஏற்கனவே மார்கெட்டில் உள்ள ஸ்மார்ட் வளையலை விட இது முற்றிலும் வித்தியாசமானது எனவும், சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது, இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.

எனவே இந்த ஸ்மார்ட் வளையலை உருவாக்கியுள்ளேன், என்றார். இந்த ஸ்மார்ட் வளையலை கண்டுபிடித்ததன்மூலம், காடி ஹரிஷ் மற்றும் சாய் தேஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.