வயநாட்டில் நிலச்சரிவு: 100 பேர் புதைந்தனரா?

இந்தியா

திருவனந்தபுரம், ஆக.11: கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய தென் மேற்கு பருவமழை தற்போது மிக தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கேரள மாநிலமே மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடந்த சில நாட்களாக இடை விடாது மழை கொட்டித் தீர்ப்பதால் மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் நிலச்சரிவு காரணமாக பெரும் அழிவை சந்தித்து உள்ளது.

இந்த மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் நிலச்சரிவும் அதிகரித்து வருகிறது. வயநாடு மாவட்டம் புத்து மலை மற்றும் மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

தேசிய மீட்புப்படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். கவளப்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 63 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்த பகுதியில் இருந்து இதுவரை 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

அதேப்போல வயநாடு மாவட்டம் புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் 18 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து இதுவரை 9 பேர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.  மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் 80-க்கும் மேற்பட்ட   இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உள்ளதால் அவர்களது கதி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. தேசிய பேரிடர் தடுப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்பட அனைத்து மீட்புபடைகளும் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.