சென்னை, ஆக.11: கள்ளக்காதல் தகராறில் ரயில்வே பெண் ஊழியரை கொலை லாட்ஜ் ரூமில் கொலை செய்து விட்டு தப்பிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் திருத்தணியை சேர்ந்த தேவேந்திரன் (வயது31) என்பவர் பெண் ஒருவருடன் நேற்று மாலை அறை எடுத்து தங்கியுள்ளார்.

மாலை 6.30 மணியளவில் தேவேந்திரன் மட்டும் வெளியே சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது.

நீண்ட நேரமாகியும் திறக்காதததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர், அறைக்கதவை மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தபோது அந்த பெண் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார் அவர் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து பெரியமேடு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் பெயர் மோகனா (வயது 35) என்பதும் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பொன்னேரியை சேர்ந்த இவரது கணவர் பெயர் ரூக்கேஷ் என்பதும், அவரும் ரயில்வேயில் ஊழியராக பணியாற்றுவதும், கணவரை பிரிந்து திருவொற்றியூரில் தனியாக வசித்து வந்த அவருக்கு கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த வீராசாமி என்கிற தேவேந்திரன் (வயது 31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும், அதனை தொடர்ந்து மோகனாவை அழைத்துக்கொண்டு பெரியமேட்டிற்கு வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கியதும் அங்கு மோகனா கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

லாட்ஜில் தங்கும்போது தேவேந்திரன் திருத்தணி ஒன்று விலாசம் கொடுத்திருந்ததால், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் திருத்தணி விரைந்தனர். மேலும் மோகனா கொலைசெய்யப்பட்டது குறித்து அவரது கணவருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தலைமறைவான தேவேந்திரன் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துள்ளார்.

இன்று அதிகாலை அவரை மடக்கி பிடித்த திருவொற்றியூர் போலீசார், பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரிடம் தேவேந்திரன் அளித்த வாக்கு மூலத்தில், மோகனா வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து இருந்ததாகவும் அதை கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதில், அவர் தாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாகவும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தேவேந்திரனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.