புதுடெல்லி, ஆக.11: இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்ட பாகிஸ்தானில் தக்காளி மற்றும் பிற காய்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. குறிப்பாக தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.300-க்கு விற்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
இதனால், இந்திய விவசாயிகளும் வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர்.

மேலும், இந்திய அரசாங்கம் சுங்க வரியை 200 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாயை எட்டியுள்ளது.
தக்காளி வர்த்தக சங்கத் தலைவர் கூறுகையில், இங்குள்ள அட்டாரி-வாகா எல்லையில் இருந்து தினமும் 75 முதல் 100 லாரிகள் தக்காளி சென்று கொண்டிருந்தன.

ஆனால் தற்போது அதை நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல பிற காய்கறிகள், பழங்கள், பருத்தி மற்றும் நூல் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களும் பாகிஸ்தானுக்கு பொருட்களை அனுப்பதை நிறுத்தி உள்ளனர்.

தக்காளியின் விலை மட்டுமின்றி உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலையும் இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது.