சென்னை, ஆக.11: குன்றத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக கபடி வீரர் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னையை அடுத்த குன்றத்தூர், பழந்தண்டலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள் (வயது 24). கபடி வீரர்.

இவர் நேற்று இரவு 9 மணியளவில் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றின் அருகே நடந்து சென்றபோது ஆட்டோவில் வந்து வழிமடக்கிய கும்பல், அவரை கத்தியால் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அந்த கும்பல் ஆட்டோவில் தப்பியது.

அங்கு இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வந்து பார்த்தபோது அருள் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார், சடலத்தை கைபற்றி பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் பூந்தண்டலம் விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கபடி போட்டியில் அருள் என்பவருக்கும் டில்லி பாபு, சதீஷ் மற்றும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குன்றத்தூர் போலீசார், அருள், அவரது சகோதரர் ஆனந்த் மற்றும் பரத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அதையடுத்து கடந்த 9 ம் தேதி அருள் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு சென்ற அருள் கொலை செய்யப்பட்டதும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து தீவிர விசாரணை நடத்திய குன்றத்தூர் போலீசார், இந்த கொலை தொடர்பாக விஜய் (வயது 24), சதீஷ் (வயது 28), மற்றும் தேவராஜ் (வயது 24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் டில்லிபாபு உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.