சென்னை, ஆக.11: போலீசாரிடம் சிக்கிக்கொண்ட காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42). திருமணமானவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கவிதா மணி (வயது 32). இவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒருவருக் கொருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கள்ளக்காதல் ஜோடி தங்களது ஊரை விட்டு வெளியேறி கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் சிவசக்தி நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர்.

அவர்களின் உறவினர்கள் இருவரும் மாயமானது குறித்து ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நம்பியூர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலிங்கம் விசாரணை நடத்தினார்.

அப்போது இந்த காதல் ஜோடி கோயம்பேடு அருகே தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 9-ந் தேதி இரவு சென்னை வந்த நம்பியூர் போலீசார் ஜெயக்குமாரை பிடித்தனர். அப்போது கவிதாமணி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

கோயம்பேடு காவல் நிலையத்தில் வைத்து ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவிதாமணி கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் கவிதாமணியையும் பிடித்தது கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் போலீசார் நம்பியூருக்கு காரில் அழைத்து சென்றனர். காரில் செல்லும் போது கவிதாமணி மற்றும் ஜெயக்குமார் இருவரும் விஷ மருந்தை அருந்தியதாக கூறப்படுகிறது.

உடனடியாக இருவரையும் ராஜீ¢வ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் கவிதாமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜெயக்குமார் இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சொந்த ஊருக்கு சென்றால் உறவினர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து கள்ளக் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.