இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? களத்தில் சேப்பாக்-திண்டுக்கல் அணிகள்

விளையாட்டு

நெல்லை, ஆக.11: இறுதிப்போட்டிக்கு முதலில் தகுதி பெறுவது யார் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளிடையே இன்று மோதுகின்றன. 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

நெல்லையில் ‘பிளே-ஆப்’ சுற்று இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கி நடக்கும் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், திண்டுக்கல் டிராகன்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் விளையாடுகின்றன.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த சீசனில் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்தது. ஆர்.அஸ்வினின் சிறந்த கேப்டன்ஷிப்பும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகயோரின் பேட்டிங்கும் அணிக்கு பக்கபலமாக இருக்கிறது.

மெதுவான தன்மை கொண்ட நெல்லை ஆடுகளத்தில் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்றில் ஆடும்.