முதல் வெற்றிபெறும் முனைப்புடன் இந்தியா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

விளையாட்டு

போர்ட் ஆப் ஸ்பெயின், ஆக.11: இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

வெஸ்ட்இண்டீசில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-0 என கைப்பற்றியது.

அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. இந்நிலையில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

டி20 தொடரை வாஷ்அவுட் செய்தது போல ஒருநாள் போட்டிகளிலும் இனிவரும் இரு போட்டிகளையும் வெல்வதில் இந்தியா முனைப்புடன் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் தவான் ஒரு நாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

ரோகித் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். கடைசி டி20 போட்டியில் ரிஷப் பண்ட் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியிலும் அது தொடர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2006-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது இல்லை. அந்த சாதனையை தக்க வைத்து கொள்ள கோலி தலைமையிலான இந்திய அணி முனைப்புடன் ஆடும். அதேநேரத்தில் 20 ஓவர் போட்டி தொடரை இழந்துள்ள நிலையில் வெஸ்ட்இண்டீஸ் இந்த போட்டியை வெல்ல போராடும்.

இதுவரை இரு அணிகளும் 128 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளன. இதில் இந்தியா அறுபதிலும், வெஸ்ட்இண்டீஸ் 62 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
இன்றைய ஆட்டம் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லின் 300-வது ஆட்டமாகும். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆடிய சாதனையை அடைகிறார். (லாரா 299 போட்டிகள்)

இதே போல் கேப்டன் விராட் கோலியும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இதுவரை 1,912 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 19 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சாதனையை படைப்பார். (பாக். வீரர் ஜாவித் மியாண்டட் – 1930 ரன்கள்).