மேட்டூர், ஆக.12: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடியாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது.

தற்போது வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல்-மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.15 லட்சம் கன அடி அளவில் நேற்று வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 1.65 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் அணையின் நீர் மட்டம் நேற்று காலை 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15 அடி அதிகரித்து அணையின் நீர் மட்டம் 82.62 அடியாக தற்போது உள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி என்ற நிலையில் தற்போது நீர் இருப்பு 44.61 டி.எம்சியாக உள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்படுகிறது. இதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை தொடும் என கூறப்படுகிறது.