லடாக், ஆக.12: காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதா மீது பேசிய லடாக்கைச் சேர்ந்த பிஜேபி எம்.பி. ஜாம்யாங் செரிங், வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு சொந்த ஊர் திரும்பிய போது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேசியக்கொடியை ஏந்தி அவர் உற்சாக நடனமிட்டார்.

காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதை காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் எதிர்த்தனர். அவர்களுக்கு சரியான பதில் கொடுக்கும் வகையில் லடாக்கைச் சேர்ந்த பிஜேபி எம்பி ஜாம்யாங் செரிங் உரையாற்றினார்.

ஜம்மு காஷ்மீரில் தங்கள் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக லடாக் இத்தனை ஆண்டு காலம் புறக்கணிக்கப்பட்டது என்றும், 70 ஆண்டுகளுக்கு மேலாக யூனியன் பிரதேசமாக ஆக்க வேண்டும் என்று கோரி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

லடாக் எங்கே இருக்கிறது என்பது கூட தெரியாதவர்கள் என்று திமுக எம்பிகளை சாடிய போது பிரதமர் உட்பட அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

நாடாளுமன்றக் கூட்டம் முடிந்து அவர் லடாக் திரும்பினார். அப்போது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லடாக் மக்கள் எப்பொழுதுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் மிக்கவர்கள். அதனால் இந்த வரவேற்பின் போது பட்டாசுகளை அவர்கள் வெடிக்கவில்லை. இயற்கை சூழலை பாதிக்காதவாறு எப்படி கொண்டாடலாம் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி அமைந்தது.

குறிப்பாக தனது சொந்த ஊரான மாதோவில் அளிக்கப்பட்ட வரவேற்பு தன்னை நெகிழச் செய்துவிட்டதாகவும் ஜாம்யாங் செரிங் தெரிவித்தார்.