சென்னை, ஆக.12: அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான நேர்கொண்ட பார்வை படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சென்னையில் பேட்ட படம் ரூ 1.12 கோடியை வசூல் செய்தது. ஆனால் நேர்கொண்ட பார்வை ரூ 1.58 கோடி வசூல் செய்துள்ளதால் ரஜினியை விட அஜித் வசூலில் முன்னேறி உள்ளார்.

ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் அஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

மேலும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். எச். வினோத் இயக்கி உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் கடந்த 8-ம் தேதி படம் வெளியானது.

இந்நிலையில், முதல் நாளில் படம் பற்றிய விமர்சனங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்த போதிலும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து படத்தை பார்த்து கொண்டாடினர்.

இதன் விளைவாக முதல் நாளில் தமிழகம் முழுவதும் 14 கோடி ரூபாயை படம் வசூல் செய்தது. சென்னையில் மட்டும் 1.58 கோடி ரூபாய் வசூலானது. இதற்கு முன் ரஜினியின் பேட்ட படம் 1.12 கோடியை சென்னையில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெளிநாடுகளிலும் படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான இரண்டு நாட்களில் ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூல் செய்தது. அப்படி பார்த்தால் 7.5 கோடியை அஜித் படம் குவித்துள்ளது.

மேலும் முந்தைய அஜித் படங்களுடன் ஒப்பிடும் போது இது வரை இல்லாத அளவிற்கு இந்த படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.