காஞ்சிபுரம், ஆக.12: கடந்த பத்து தினங்களாக நின்ற கோலத்தில் காட்சியளித்து வரும் அத்திவரதர் இன்று மஞ்சள் மற்றும் பச்சை நிற பட்டாடையில் அற்புதக் கோலம் கொண்டிருந்தார்.

கடந்த 43 நாட்களாக அத்திவரதரை லட்சக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர். நின்ற கோலத்தில் கடந்த 10 நாட்களாக அருள்பாலித்து வரும் அத்திவரதர், இன்னும் நான்கு நாட்களுக்கே காட்சி தருவார்.

இரண்டாவது நாளாக ராஜ கிரீடம் சாற்றப்பட்டுள்ளது. வண்ண மலர்களால் அத்திவரதர் அலங்கரிக்கப்பட்டு அழகே உருவாக காட்சியளிக்கிறார்.

அதனால் அத்திவரதரை எப்படியும் தரிசித்து விட வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் காஞ்சி மாநகரை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அதிலும் சனி, ஞாயிறு விடுமுறை, அத்துடன் ஏகாதசி என்பதால் சுமார் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் இன்று பக்ரீத் அரசு விடுமுறை என்பதால் மிக அதிகபட்சமாக மக்கள் தரிசனத்துக்காக குவிந்த வண்ணம் இருப்பதால் காஞ்சி நகரமே திணறுகிறது.

பக்தர்களின் பெரும் கூட்டத்தை சமாளிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இன்றைய தினம் கூடுதலாக 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தார்கள். மொத்தம் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.