சென்னை, ஆக.12: மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதை அடுத்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக நாளை காவிரியில் தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவிடுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நண்பகல் 12 மணி நிலவரப்படி 2.20 லட்சம் கன அடியாக உள்ளது.

நேற்று அணையின் நீர் மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15 அடி அதிகரித்து இன்று அணையின் நீர் மட்டம் 86.90 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 49.17 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் காவேரி டெல்டா பகுதி நெற்களஞ்சியமாக விளங்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை நீர்ப்பாசனம். மேட்டூர் அணையை வழக்கமாக திறக்கும் நாளான ஜூன் 12-ம் தேதி அன்று போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் பாசனத்திற்காக நீர் திறக்க இயலாத நிலை ஏற்பட்டது.

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து, தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கிவிட்டதாலும், நீர்வரத்தும் விநாடிக்கு 2.40 லட்சம் கன அடியாக இருப்பதாலும், அணையின் நீர் இருப்பு 62 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது.

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது என்பதையும், காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடக நீர்த் தேக்கங்களிலிருந்து கிடைக்கக் கூடிய நீரினை எதிர்நோக்கியும், விவசாயிகளின் நீர்த் தேவையினையும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து நெல் சாகுபடிக்கென நாளை 13-ம் தேதி காவேரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், நானே நாளை நேரில் சென்று மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன்.

இதன் மூலம், காவேரி மற்றும் காவேரி படுகையில் உள்ள ஏறக்குறைய 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு, அதன் வாயிலாக பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் உயர்வடைந்து, குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்த இயலும். வேளாண் பெருமக்கள் நீரினை அனைத்து கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பாசனத்திற்கு பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.