சென்னை, ஆக. 12: தமிழக அரசு பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடகமாக சேர்க்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்பு மணி கேட்டு கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- தமிழகத்தின் முதன்மைத் தொழிலாக வேளாண்மை திகழும் நிலையில், அது குறித்த பாடங்களை நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அக்கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் தொழிற்படிப்புகளில் மருத்துவம், பொறியியல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வது விவசாயம் ஆகும். உயர்கல்வியில் முதன்மைப் படிப்பாக இருக்கும் விவசாயம், பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை என்பது தான் மிகவும் முரணான விஷயமாகும். மேல்நிலைக் கல்வியில் சுமார் 200 பள்ளிகளில் மட்டும் வேளாண்மை ஒரு பாடமாக இருக்கிறது.

ஆனால், தொடக்கக் கல்வியிலோ, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளிலோ விவசாயம் ஒரு பாடமாக்கப்படவில்லை. இதுகுறித்த கோரிக்கைகள் எதுவும் செவிமடுக்கப்படவில்லை. வேளாண்மை என்பது இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முதன்மை விருப்பமாக உள்ளது. விவசாயத்தை உயர்கல்வி வாய்ப்பாகவும், தொழிலாகவும் பார்க்கும் மாணவர்களை விட, விவசாயத்தை தங்கள் வாழ்க்கையின் அங்கமாக கருதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இப்போதே தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் சொந்த விருப்பத்தில் இயற்கை விவசாயம், பல்வேறு வகை கீரைகள் சாகுபடி போன்றவை நடைபெற்று வருகின்றன. இத்தகைய தருணத்தில் தமிழக பள்ளிகளில் விவசாயத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவது மாணவர்களிடையே விவசாயம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.

தமிழகத்திலுள்ள பள்ளிகளில் ஓவியம், இசை, தையல் போன்ற தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக அப்பாடங்களில் தொழிலாசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப் படுகின்றனர். அதேபோல், விவசாயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தொழிலாசிரியர் பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால், பள்ளிகளில் வேளாண்மை ஒரு பாடமாக இல்லாததால் அவர்கள் வேலைவாய்ப்பின்றி வாடுகின்றனர்.

எனவே, தமிழகத்திலுள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வேளாண்மையை ஓர் பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும். வேளாண்மை பாடத்தை நடத்துவதற்காக சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். இதன்மூலம் வேளாண்மை குறித்த அடிப்படைகளை மாணவர்களுக்கு கற்றுத் தருவதுடன், வேளாண் சிறப்பாசிரியர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.