போர்ட் ஆஃப் ஸ்பெயின், ஆக.12: வெஸ்ட் இண்டீசுக்கு (விண்டீஸ்) எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபார சதம் மற்றும் ஸ்ரேயாஸின் அரைசதத்தால், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

வெ.இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினியில் நேற்று நடந்தது. இதில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி அதிர்ச்சியளித்தனர்.இருப்பினும், கேப்டன் விராட் கோலி (120) பொறுப்புடன் விளையாடி அசத்தல் சதம் அடித்தார். இவருடன் ஸ்ரேயாஸ் அய்யரும் (71) கைக்கோர்த்து அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்,

அதன்படி, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ. இண்டீஸ் விளையாடிக்கொண்டிருந்தபோது, மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 42 ஓவர்கள் முடிவிலேயே வெ.இண்டீஸ் அணி 210 ரன்களுக்குள் சுருண்டது.
இதன்மூலம், 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சாதனை மன்னன் கோலி:

இதில், இதில் கேப்டன் கோலி 125 பந்துகளில் 120 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 1993-ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஜாவித் மியான்டட், வெ.இண்டீசுக்கு எதிராக 64 இன்னிங்ஸ்களில் 1930 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்க கோலிக்கு 19 ரன்களே தேவைப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் 34 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை கோலி முறியடித்தார்.

இதன்மூலம் வெ.இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். மேலும், 42-ஆவது ஒருநாள் சதம். 67-ஆவது சர்வதேச சதம். கேப்டனாக 20-வது ஒருநாள் சதம், வெ.இண்டீசுக்கு எதிராக 8-வது ஒருநாள் சதம் என அவரது சாதனை பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது, அவரது ரசிகர்களை
குஷிப்படுத்தியுள்ளது.