முக்கொம்பில் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

சென்னை

சென்னை, ஆக. 12: முக்கொம்பு புதிய அணை கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டு கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பெரும் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது.

பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், காவிரி பாசன மாவட்டங்களுக்கு முழுமையாகப் பயன்படாமல், கடலில் போய் வீணாக கலந்துவிடும் நிலை கவலை தருகிறது. ஏனெனில், திருச்சி மாவட்டம் – முக்கொம்பு மேல் அணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் ஏழு மதகுகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த மதகுகளை சீர்படுத்த ரூபாய் 387.60 கோடி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை கடந்த 2018 டிசம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்டது. முக்கொம்பில் 55 கதவு அணைகளுடன் புதிய அணை கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக புதிய அணை பணிகள் துரிதமாக நடைபெறாததால், அணை கட்டுமானம் முதற்கட்டப் பணியோடு நின்றுவிட்டது.

இந்தப் புதிய அணையிலிருந்து 2 இலட்சத்து 83 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். இதனால் தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மேட்டூரிலிந்து திறந்துவிடும் நீர் வீணாகக் கடலில் சென்று கலக்காமல், காவிரி டெல்டா சாகுபடிக்குப் பயன்படும் வகையில் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்திடுமாறு வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.