சென்னை, ஆக.12: தோஷம் கழிப்பதாக கூறி வங்கி அதிகாரி வீட்டில் நகை, பணங்களை வைத்து பூஜை செய்து, நகைகளுடன் தலைமறைவான போலி சாமியார்களை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டனர்.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சந்திரபால் பாண்டியன் (வயது 65). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான இவர். இங்கு குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவரது மூத்த மகன் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 5 வருடங்கள் முன்பு உயிரிழந்துவிட்டார்.

மகனின் திடீர் இழப்பை ஏற்கமுடியாமல், இது தொடர்பாக, திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்று ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளார்.

அப்போது, இவரது வீட்டுமுகவரியை சில சாமியர்கள் கேட்டு பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன்மூலம், கடந்த 21-ம் தேதி 5 பேர் கொண்ட சாமியார் கும்பல் இவரது வீட்டிற்கு வந்து தோஷம் இருப்பதால் தான் இவ்வாறான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறி, தோஷ நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி, 4 சவரன் நகை, ரூ. 1000 பணத்தை வைத்து பூஜை செய்துக்கொண்டிருந்தபோது, நகை, பணத்துடன் காரில் தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து, பாண்டியன் அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிந்து கார் நம்பரை வைத்து தேடிவந்தனர்.

அது அரும்பாக்கத்தை சேர்ந்த ராம்ஜி என்பவரது கார் என தெரியவந்தது. ஆனால், அவர் தனது காரை வேலூர் காட்பாடியை சேர்ந்த செந்தில் என்பவருக்கு விற்றுவிட்டதாக கூற, செந்தில் என்பவரிடம் போலீசார் விசாரிக்கையில், சம்பவத்தன்று திருவண்ணாமலையை சேர்ந்த ஜோசப் என்பவர்தான் காரினை எடுத்துச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, ஜோசப்பை கைது செய்த போலீசார், இவர் அளித்த தகவலின்பேரில், சென்னை அண்ணாசாலையில் காரில் சென்றுக்கொண்டிருந்த உதயகுமாரை நேற்றிரவு கைது செய்து, நகை, பணத்தை மீட்டு, காரினையும் பறிமுதல் செய்தனர்.