ஊட்டி, ஆக. 12: தென்மேற்கு பருவ மழையால் நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூடலுர், பந்தலூர் பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மரங்கள் விழுந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டுளளது. சாலைகளும் உடைந்து பல இடங்களில் போக்குவரத்து துண்டிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் மழை சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்காக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் நேற்று ஊட்டி சென்றார். நேற்று நடுவட்டம் இந்திராநகர் பகுதியில் மண்சரிவால் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி அமுதாவின் குடும்பத்திற்கு ரூ.1லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இதையடுத்து கூடலூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் நிலச்சரிவை பார்வையிட்டார். இதேபோல் சேரம்பாக்கம் திருமண மண்டபத்தில் இருந்த மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். அப்போது ஸ்டாலினுடன் நீலகிரி தொகுதி எம்பி அ.ராசா உடன் சென்றார்.