கொழும்பு, ஆக.12:இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்திய முன்னாள் பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபட்சவை தனது கட்சியின் சார்பில் நிறுத்தவிருப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவித்துள்ளார்.

சிங்களர்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவராக அறியப்படும் கோத்தபய ராஜபட்ச (70), மகிந்த ராஜபட்சவின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மகிந்த ராஜபட்ச பேசியதாவது: இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபட்ச நிறுத்தப்படுவார்.

இலங்கையில் சட்டம் – ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டியுள்ளது. அந்தப் பணிக்கு மிகவும் ஏற்றவர் கோத்தபய ராஜபட்சவே என்றார் அவர். அந்தக் கூட்டத்தில் பேசிய கோத்தபய ராஜபட்ச, “தற்போது நாட்டுக்கு மிக அத்தியாவசியமாக உள்ளது தேசப் பாதுகாப்பே ஆகும். இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்’ என்றார் அவர்.

மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கடந்த 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப் போரை பாதுகாப்புச் செயலர் என்ற முறையில் கோத்தபய ராஜபட்ச முன்னின்று நடத்தினார். இதன் காரணமாக, அவருக்கு பெரும்பான்மை சிங்களர்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த அதிபர் தேர்தலில் அவர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடும் என்று நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது. அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது மகிந்த ராஜபட்ச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.