திருநெல்வேலி, ஆக.12:  விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது, காஞ்சி அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக்-திண்டுக்கல் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணியின் தொடக்க வீரர் கங்கா 54 பந்துகளில் 81 ரன்கள் பொலந்துகட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணியினர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டநேர முடிவில் 164 ரன்கள்தான் எடுக்கமுடிந்தது. இதன்மூலம், 5 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடந்த வெளியேற்றச்சுற்று போட்டியில், மதுரை-காஞ்சி அணிகள் மோதின. முதல்பேட்டிங் செய்த காஞ்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்க்க, பின்னர் விளையாடிய மதுரை அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், காஞ்சி அணி தொடரை விட்டு வெளியேறியது. இதனையடுத்து, நாளை (ஆக.13) நடக்கவுள்ள 2-வது தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல்-மதுரை அணிகள் மோதவுள்ளது, குறிப்பிடத்தக்கது.