போர்ட் ஆஃப் ஸ்பெயின், ஆக.12:  இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விண்டீஸ் அணி தோல்வியடைந்ததற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. இதில், இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், தோல்வி கண்ட விண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் போட்டிக்கு பின்னர் பேசுகையில், நான் மிகுந்த வேதனையுடன் உள்ளேன். நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். ஆட்டம் எங்களது கையில் இருந்தது. ஆனால், பேட்டிங்கை பொறுத்தவரையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம். இதன்மூலம் ஆட்டத்தையே இழந்துவிட்டோம். இனி நாங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆட்டத்தை ஆழமாக உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம். ஆடுகளத்தின் தன்மை உணர்ந்து பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், சிறப்பாக செயல்படாத பேட்ஸ்மேன்கள்தான் தோல்விக்கு முழு பொறுப்பேற்று கொள்ள வேண்டும், என்றார்.