தாம்பரத்தில் மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு

சென்னை

தாம்பரம், ஆக.12: இந்திய மருத்துவர்கள் சங்க (ஐ.எம்.ஏ.) தாம்பரம் கிளையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவர்கள் அமைப்பு சார்பாக மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்திய மருத்துவர்கள் சங்க(ஐ.எம்.ஏ.) தாம்பரம் கிளையின் ஒரு அங்கமாக தாம்பரம் மகப்பேறு மருத்துவர்கள் அமைப்பு புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

இந்திய மரு¢ததுவர்கள் சங்க தேசிய துணை தலைவர் ஜே.ஏ.ஜெயலால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இதனை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மருத்துவத்துறையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து விவரித்தார். மருத்துவர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகளை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களை விவரித்தார்.

மகப்பேறு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்து நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பெங்களூரிலிருந்து சுசீலாராணி, ஒடிசாவிலிருந்து பி.சி.மகாபாத்ரா, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்ட மகப்பேறு மருத்துவ வல்லுனர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களையும், இக்கட்டான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

மகப்பேறு மருத்துவர்களாக பணியாற்றிவருபவர்கள், பி.ஜி.மருத்துவம் படித்துவரும் மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்று பலனடைந்தனர். ஐ.எம்.ஏ.தாம்பரம் கிளையின் தலைவர் முருகன், செயலாளர் உமையால் முருகேசன், பொருளாளர் சரவணகுமார் மற்றும் கிருத்திகா தேவி, சாய்ஜெயலட்சுமி உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.