கையும் களவுமாக சிக்கிய செல்போன் திருடன்

சென்னை

சென்னை, ஆக.12: பாதசாரியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட செல்போன் கொள்ளையனை பொதுமக்கள் மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 20 செல்போன்கள் மீட்கப்பட்டது. தி.நகரை சேர்ந்தவர் சேஷாத்திரி நாதன் (வயது 57), இவர் தனது வீட்டின் அருகே உள்ள கோட்ஸ் சாலையில் வழக்கம்போல் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவ்வழியாக நடந்து வந்த மர்மநபர், சேஷாத்திரி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துகொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.

சேஷாத்திரி சத்தம்போடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து பாண்டிபஜார் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அமைந்தகரையை சேர்ந்த பாஷா (வயது 19) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பாஷாவிடம் இருந்து 20 செல்போன்கள் மீட்கப்பட்டது. தி.நகர் பாண்டிபஜார் பகுதி போன்ற தி.நகர் சுற்றுவட்டார பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அங்கு நடந்து செல்லும் பாதசாரிகளிடம் செல்போன்களை குறிவைத்து கொள்ளையடிப்பதையே பாஷா வழக்கமாக கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.