‘ராமபிரானின் வம்சத்தை சேர்ந்தது எங்கள் குடும்பம்’

சென்னை

சென்னை, ஆக.12: கடவுள் ராமரின் மகனான குசனின் வம்சத்தில் வந்தது எங்கள் குடும்பம் என்று பிஜேபி எம்.பி. தியா குமாரி தெரிவித்தார். அயோத்தி விவகாரம் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது கடவுள் ராமரின் வம்சமான ரகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இன்னமும் அயோத்தியில் வசிக்கிறார்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் ராம் லல்லா தரப்பில் வாதிடும் மூத்த வழக்குரைஞர் கே.பராசரனை நோக்கி நீதிபதிகள் இந்தக் கேள்வியைக் கேட்டனர். அதற்கு பராசரன் பதிலளிக்கையில் “இது தொடர்பான என்னிடம் தகவல் இல்லை. அது பற்றி அறிய முயற்சி செய்வேன்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரச வம்சத்தைச் சேர்ந்தவரும், ராஜ்சமந்த் தொகுதியின் பிஜேபி எம்.பி.யுமான தியா குமாரி கூறுகையில் தங்கள் குடும்பம் ராமரின் மகனான குசனின் வம்சாவளியில் வந்தது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: ராமரின் வம்சாவளியில் வந்தவர்கள் எங்கே என்று நீதிமன்றம் கேட்டுள்ளது.ராமரின் வம்சாவளியில் வந்தவர்கள் உலகெங்கிலும் உள்ளனர்.

அவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். எங்கள் அரச குடும்பத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறேன். ராமர் மீது அனைவருக்கும் பக்தியும் நம்பிக்கையும் உள்ளது. அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு விசாரணை துரிதமாக நடத்தப்பட்டு, நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

தேவைப்பட்டால், ராமரின் மகனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆவணங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். எனினும், அயோத்தி வழக்கில் நானாகத் தலையிட மாட்டேன் என்று தியா குமாரி தெரிவித்தார். அயோத்தி விவகாரம் தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் தொடர்பான விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.