மும்பை, ஆக.12:  மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2 வேகவைத்த முட்டையின் விலை ரூ. 1,700 என பில் வசூலித்தனர். பணத்தை கொடுத்த வாலிபர் அந்த பில்லை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் உலா வர செய்துள்ளார்.

2 வாழைப்பழத்திற்கு ரூ 442 பில் போட்ட சம்பவமே இன்னும் ஓயாத நிலையில், மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2 வேகவைத்த முட்டைக்கு ரூ1,700, ஆம்லேட்டிற்கு ரூ.850 என பில் போட்டு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பார்த்தலே பத்துநாளைக்கு பசி வராததுபோல், தலை சுற்ற வைக்கும் இந்த பில்லை கட்டிவிட்டு, இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியாத அந்த வாலிபர் தான் கட்டிய பில்லை போட்டோ பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்த விமர்சனங்கள், கண்டனங்கள் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர் ராகுல் போஸ் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் தான் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் 2 வாழைப்பழத்திற்கு ரூ442 க்கு பில் போட்டதை வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. மேலும் வாழைப்பழத்திற்கு விதிகளை மீறி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டதால் அந்த ஓட்டலுக்கு கலால் மற்றும் வரிவிதிப்பு துறை அதிகாரிகள் ரூ25,000 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.