சேலம், ஆக.13: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ள நிலையில் டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்துவைத்தார். தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிவரை நீர் வரத்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் குடகு பகுதியிலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால், அணைக்கு வந்த நீர் முழுவதையும் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்றிரவு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடந்த 9-ந் தேதி அணையின் நீர்மட்டம் 54 அடியாக இருந்த நிலையில், நான்கே நாட்களில் அணையின் நீர்மட்டம் சுமார் 40 அடிக்கும் மேலாக உயர்ந்து உள்ளது.

நீர்மட்டம் 100 அடியை எட்டியதாலும், கர்நாடக, கேரள பகுதிகளில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், காவிரி டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நீரை முறைப்படி திறந்து வைத்தார். வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் இப்போது திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.